அரூர்:
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த அச்சல்வாடி பஞ்சாயத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மின் மோட்டார் பழுது, ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும், ஒகேனக்கல் குடிநீரும் வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வந்துள்ளனர்.
இதனால், அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அரூர்- பேதாதம்பட்டி சாலையில், அச்சல்வாடி பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அரூர் தாசில்தார் செல்வராஜ், பி.டி.ஓ., ஆனந்தன், இன்ஸ்பெக்டர் பவுலோஸ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இன்னும் ஒரு சில நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.