செய்திகள்

சேலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சேலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலை மலர்

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம், நாராயணன் நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை 2 அல்லது 3 குடங்கள் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை கிச்சிப்பாளையம் நாராயணன் நகர் மெயின் ரோட்டில் திரண்டனர்.

பின்னர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.

மேலும் சீரான குடிநீர் கிடைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்னர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் 20 நிமிடத்திற்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.