திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறுக்கை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை இவருக்கு மணிகண்டன் (வயது 28), பரசுராமன் (25) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அருங்குறுக்கை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மணிகண்டன் மற்றும் அவரது தம்பி பரசுராமன் ஆகியோர் கேரளாவிலிருந்து புறப்பட்டு சொந்த ஊரான அருங்குறுக்கைக்கு வந்தனர்.
நேற்று இரவு அந்த கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. சாமி தரிசனம் செய்வதற்காக ஏழுமலை மற்றும் அவரது மகன்கள் மணிகண்டன், பரசுராமன் ஆகியோர் கோவிலுக்கு சென்றனர்.
அப்போது குடிபோதையில் இருந்த பரசுராமன் கோவிலில் இருந்த பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதைப்பார்த்த ஏழுமலை மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பரசுராமனை கண்டித்து வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
மதுபோதை அதிகமானதால் பரசுராமன் வீட்டுக்கு வந்த பிறகும் தொடர்ந்து சத்தம் போட்டு கொண்டே இருந்தார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர்.
உடனே ஏழுமலை எதற்காக இப்படி குடித்து விட்டு இரவில் தகராறு செய்கிறாய்? என பரசுராமனிடம் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பரசுராமன் தந்தை என்றும் பாராமல் ஏழுமலையை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த மணிகண்டன் 2 பேரையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் பரசுராமன், மணிகண்டனையும் தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் கிடந்த கத்தியை எடுத்து பரசுராமனை சரமாரியாக குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த பரசுராமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பரசுராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடி போதையில் தகராறு செய்த தம்பியை அண்ணன் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews