மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் நகர் 1-வது வார்டு பழைய சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் பிரபு (வயது26), விவசாயி. ரேக்ளா பந்தயங்களிலும் பங்கேற்று வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (36), லாரி கிளீனர். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், மகனும் உள்ளனர். சிவக்குமாரும், பிரபுவும் நண்பர்கள் என்பதால் அடிக்கடி மது அருந்துவது வழக்கம்.
நேற்று இரவு 2 பேரும் மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியில் உள்ள மாத்தி கண்மாய்க்கு சென்றனர். அங்கு அழகர்கோவில் சாலையில் உள்ள கரையோரம் அமர்ந்து 2 பேரும் மது அருந்தினர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் மோதலாக மாறியது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த பிரபு அரிவாளால் சிவக்குமாரை சரமாரியாக வெட்டினார். பலத்த காயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த படுகொலை குறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலூர் துணை சூப்பிரண்டு சுபாஷ், இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் பாலமுரு கன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் அங்கு தீவிர விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் பிரபுவை கைது செய்தனர்.
மேலூர் பகுதியில் கடந்த 10 நாட்களில் சகுந்தலாதேவி, ஆயம்மாள், அன்புநாதன் மற்றும் சிவக்குமார் ஆகிய 4 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பது அங்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.