குடிமராமத்து பணி நடைபெற்று வரும் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு நடத்தியபோது எடுத்தபடம். 
செய்திகள்

குடிமராமத்து பணி: 1,844 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்- பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிமராமத்து பணி மூலம் 1,844 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும் என்று ஆய்வு நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரி மோகனபிரியா தெரிவித்தார்.

மாலை மலர்

தர்மபுரி:

தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தர்மபுரி ராமாக்காள் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணி ரூ.67.50 லட்சம் மதிப்பில் விவசாயிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரியில் தண்ணீர் தேங்கும் பகுதியில் தூர்வாரும் பணி, ஏரியின் கரைகளை பலப்படுத்தும் பணி நடக்கிறது. இதேபோல் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை சீரமைத்து பொலிவுபடுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்தநிலையில் ராமாக்காள் ஏரியில் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் மோகனபிரியா மற்றும் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு 2020-2021-ம் ஆண்டில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.3 கோடியே 94 லட்சம் மதிப்பில் சவுளுப்பட்டி, பூலாம்பட்டி, மைலம்பாடி, நரிப்பள்ளி ஆகிய அணைக்கட்டுகள் மற்றும் 5 ஏரிகளில் தூர்வாரும் பணி, நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மழைக்காலத்தில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் இந்த குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 41 ஏரிகளில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த திட்டம் மூலம் மாவட்டத்தில் 1,844 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மழைக்காலங்களில் மழைநீர் சேகரிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புகள் உருவாகும் என்று கூறினார்.