சென்னை:
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணைய அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த மாதம் 13-ம் தேதி மத்திய தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் வில்போர்டு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது, அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் ஒப்புதல் அளித்திருந்ததால் அதன் பெயரிலேயே விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
இதனையடுத்து, ஜெயலலிதா கைரேகை வைத்ததாக சான்றளித்த மருத்துவர் பாலாஜி ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, பாலாஜி கடந்த மாதம் 27-ம் தேதி ஆஜரானார். அப்போது, அவரிடம் கைரேகை தொடர்பாக மனுதாரரின் வழக்கறிஞர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாலாஜி இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்றும் ஐகோர்ட்டில் அவர் ஆஜராகி தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தார். இதனையடுத்து, இவ்வழக்கு அடுத்தமாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.