செய்திகள்

சின்னம் ஒதுக்க ஜெயலலிதா சுயநினைவுடன் ஒப்புதல் அளித்தாரா?: டாக்டர் விளக்கம் அளிக்க கோரி வழக்கு

ஏ.கே. போசுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தாக்கல் செய்யப்பட்ட படிவத்தில் ஜெயலலிதா சுயநினைவுடன் ஒப்புதல் அளித்தாரா என்று டாக்டர் விளக்கம் அளிக்க கோரி தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மாலை மலர்

சென்னை:

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது.

அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போஸ், தி.மு.க. சார்பில் சரவணன் உட்பட பலர் போட்டியிட்டனர். இதில், ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சரவணன், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க சரவணன் நேரில் ஆஜராகி இருந்தார்.

அப்போது, சரவணன் தரப்பில் கூடுதலாக ஒரு துணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அப்போது, ஏ.கே. போசுக்கு அ.தி.மு.க. தேர்தல் சின்னமாக இரட்டை இலையை ஒதுக்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட படிவத்தில் ஜெயலலிதா கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் அவர் கையெழுத்து இல்லை.

எனவே, இவருக்கு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று ஜெயலலிதா நல்ல சுயநினைவுடன் இருந்து தான், இந்த படிவத்தில் கைவிரல் ரேகையை பதிவு செய்தாரா? என்ற கேள்வி எழுகிறது. எனவே, ஜெயலலிதாவின் கைரேகை பதிவை பெறும்படி அவர் நல்ல நினைவுடன் இருந்தால் என்ற ஒப்புதல் அளித்த டாக்டரை இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்ய வேண்டியதுள்ளது.

அதனால், அந்த டாக்டரை அனைத்து ஆவணங்களுடன், கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் பிறப்பிக்கவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.