ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்ததால் அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.
அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்காளர்களுக்கு சுமார் ரூ.100 கோடி பணம் விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஏப்ரல் 9-ந்தேதி தேர்தலை ரத்து செய்து தேர்தல் கமி ஷன் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 4-ந்தேதி கடைசி நாளாகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆர்.கே.நகர் தொகுதியில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது.
இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் அணி, பா.ஜனதா, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் கட்சி அலுவலகங்களில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு அந்த தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு, ஏற்கனவே வேட்பாளராக நிறுத்தப்பட்ட மருதுகணேஷ், முன்னாள் வேட்பாளர் சிம்லா முத்து சோழன் மற்றும் ஆர்.கே.நகர் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் ஆகி யோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேசை நிறுத்தினால்தான் அமோக வெற்றி பெற முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வருகிற 21-12-2017 அன்று நடைபெற இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற தி.மு.க. வேட்பாளராக என்.மருதுகணேஷ் (எ) என்.எம்.கணேஷ் பி.காம், பி.எல். போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து மருது கணேசை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தகவலை தெரிவித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி விபரம் வருமாறு:-
கேள்வி:- இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு உண்டா? விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் அழைப்பு உண்டா?
பதில்:- ஏற்கனவே இதுபற்றி அறிக்கையில் அறிவித்து இருக்கிறோம். தோழமை கட்சிகளின் ஆதரவு எங்களுக்கு உண்டு. இருந்தாலும் மேலும் பல கட்சிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் தர வேண்டும் என்று தி.மு.க. சார்பில் எடுத்து வைப்போம்.
கே:- கடந்த தேர்தலின் போது ரூ.81 கோடி பணப்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க.வினர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. அதன் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே தேர்தல் நியாயமாக நடக்கும் என்று நம்புகிறீர்களா?
ப:- தேர்தல் நியாயமாக நடக்காது என்ற காரணத்தால்தான் நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தை நாடி உள்ளோம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. எனவே ஜனநாயக முறைப்படி தேர்தலை எதிர்கொள்ள தயராக இருக்கிறோம். இந்த தேர்தலில் தி.மு.க. நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
கே:-அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கிய மறுதினமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதே?
ப:- இதற்கு நேற்றே தெளிவாக பதில் கூறியுள்ளோம். எம்.ஜி.ஆர். இருந்த போதும் இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து இருக்கிறோம். ஜெயலலிதா அம்மையார் இருந்த போதும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து இருக்கிறோம்.
பல தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து தி.மு.க. மிக பெரிய வெற்றிகளை பெற்று இருக்கிறது. எனவே இரட்டை இலை சின்னம் பற்றி நாங்கள் துளி அளவு கூட கவலைப்படவில்லை.