செய்திகள்

காஷ்மீர் இளைஞர்கள் அனைவரையும் கல்லெறி கும்பல்களாக சித்தரிக்கும் விவாதம் வேண்டாம்: மெகபூபா முப்தி

காஷ்மீர் இளைஞர்கள் அனைவரையும் கல்லெறி கும்பல்களாக சித்தரிக்கும் வகையில் விவாதம் நடத்துவதை தேசிய ஊடகங்கள் கைவிட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான ஜம்முவிற்கு முதல்வர் மெகபூபா முப்தி இன்று வருகை புரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

காஷ்மீர் இளைஞர்கள் அனைவரையும் கல்லெறி கும்பல்களாக சித்தரிக்கும் வகையில் விவாதம் நடத்துவதை தேசிய ஊடகங்கள் கைவிட வேண்டும். இத்தகைய விவாதங்கள் காஷ்மீர் மக்களின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடும்.

காஷ்மீரில் அரசியல் குழப்பம், அமைதியின்மை 1947 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் பொதுவாக்கெடுப்பு கோரி நடந்த போராட்டங்கள் 22 ஆண்டுகளுக்கு நீடித்தது. பின்னர் அமைதி சிறிது காலம் நீடித்தது. மீண்டும் 1990-க்குப் பிறகு அமைதி குலைந்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள அனைத்து இளைஞர்களும் வன்முறையாளர்கள் கிடையாது. அனைவரும் கல்லெறியும் நபர்கள் கிடையாது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஆன்மா. காஷ்மீரிகளுக்கு அவர்கள் மாநிலம் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு அங்குலமும் சொந்தம். அவர்கள் அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

போராடும் இளைஞர்கள் கோபத்துடனும், கைவிடப்பட்ட மனத்தாங்கலிலும் உள்ளனர். சிலர் உணர்ச்சிகரமாக தூண்டப்பட்டு காணப்படுகின்றனர். என்றாலும் பல இளைஞர்கள் தேசிய அளவில் பல தேர்வுகளிலும், விளையாட்டுப்போட்டிகளிலும் சிறப்பாக செயலாற்றுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் இன்று காணப்படும் கொந்தளிப்பு தீர்வுகாண முடியாதது என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் பல சூழ்நிலைகளை பார்த்து விட்டேன்.