அணுசக்தி விநியோக நாடுகள் (என்.எஸ்.ஜி) அமைப்பில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்தி வினியோக கூட்டமைப்பில் 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் சேருவதற்கு இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியா உறுப்பு நாடாக சேர அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் சீனா மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. என்.எஸ்.ஜி.-யில் சேர பாகிஸ்தானும் முயற்சி மேற்கொண்டுவருகிறது.
என்.எஸ்.ஜி.-ல் இந்தியாவை சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று சீனா கூறி வருகிறது. கடந்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற என்.எஸ்.ஜி ஆண்டுக் கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதில்லை என்ற முடிவில் சீனா உள்ளிட்ட சில நாடுகள் உறுதியாக இருந்தன.