மும்பை:
பா.ஜ.க.வின் நீண்டநாள் கூட்டணி கட்சியான சிவசேனா தற்போது பா.ஜ.க.வின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இதன் காரணமாக மத்தியிலும், மகாராஷ்டிர மாநிலத்திலும் கூட்டணியில் இருந்து விலகலாம் என்ற பேச்சுஅடிபட்டது. ஆனால், மக்கள் நலன்களை பாதுகாப்பதற்காக கூட்டணியில் நீடிக்க சிவ சேனா விரும்புகிறது.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்ற தசரா விழாவில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பா.ஜ.க.வை மீண்டும் சீண்டினார். அவர் பேசியதாவது:-
தேசபக்தி பற்றி பா.ஜ.க. எங்களுக்கு கற்றுக் கொடுக்க தேவையில்லை. தேசபக்தியை கற்றுக்கொள்ள வேண்டிய நாள் இன்னும் வரவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக பேசுபவர்கள் தேசபக்தர்கள் போன்றும், எதிர்ப்பவர்கள் துரோகிகள் போன்றும் ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
போராட்டங்கள் நடத்தும்போது பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேசுவதை சிவ சேனா கட்சியினர் தவிர்க்க வேண்டும்.
சீரான வரிவிதிப்புக்காக ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்ததாக இந்த அரசு கூறுகிறது. எங்கே சீரான வரி இருக்கிறது? பாகிஸ்தானில்கூட இந்தியாவைவிட குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.