புதுடெல்லி:
பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மாட்டு தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
சிறைக்கு செல்லும் முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த லாலு, தங்களது முயற்சியில் தோல்வி அடைந்திருந்தால் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், பாபா சாஹேப் அம்பேத்கர் போன்றவர்களை வரலாறு வில்லன்களாகவே சித்தரித்து இருக்கும். இப்போதும் சில மதவாத, சாதியவாதிகளால் அவர்கள் வில்லன்களாகவே கருதப்படுகின்றனர். இதைப்போன்றவர்களிடம் இருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை வேறு யாரும் எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
லாலுவின் இந்த கருத்துக்கு லோக் ஜன்சக்தி கட்சி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம் விலாஸ் பஸ்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அம்பேத்கரை லாலு இழிவுப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், நீங்கள் நீதிமன்றத்தால் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளீர்கள், பா.ஜ.க.வால் அல்ல என்றும் கூறியுள்ளார்.
உங்கள் பாவத்தை மறைப்பதற்காக எல்லாவற்றிலும் பா.ஜ.க.வை குற்றம்ச்சாட்டி கொண்டிருக்க கூடாது. மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா, பாபா சாகேப் அம்பேத்கருடன் உங்களை ஒப்பிடவே கூடாது. அவர்கள் நாட்டின் நலன் கருதி தியாகங்களை செய்தவர்கள். நீங்கள் ஊழலுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளீர்கள். நாட்டு நலனுக்காக போராடியதற்காக அல்ல என்றும் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.