இறந்து கிடக்கும் டால்பின் மீன்களை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி. 
செய்திகள்

டால்பின் மீன்கள் கரை ஒதுங்கின - புன்னக்காயல் கடற்கரையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

புன்னக்காயல் கடலோர மீனவ கிராமத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீன்கள் குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தலைமையிலான குழுவினர் கடற்கரையில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கடலோர மீனவ கிராமம் ஆகும். தாமிரபரணி ஆறு சங்கமிக்கும் இப்பகுதியில் கடற்கரையில் இருந்து கடலுக்கு படகுகள் எளிதில் செல்லும் வகையில் 2 தூண்டில் வளைவு பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நேற்று இரவில் இந்த தூண்டில் வளைவு பாலங்களின் அருகில் சுமார் 40-க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் கரை ஒதுங்கி உயிருக்கு போராடியவாறு கிடந்தன. உடனே அப்பகுதி மீனவர்கள், மாலுமிகள் நாட்டுப்படகுகளில் சென்று அந்த டால்பின் மீன்களை கைகளால் பிடித்தும், கயிற்றால் கட்டியும் கடலுக் குள் இழுத்து சென்று ஆழமான பகுதியில் விட்டனர். ஆனாலும் அந்த டால்பின் மீன்கள் மீண்டும் கரை ஒதுங்கியவாறு இருந்தன.

சிறிது நேரத்தில் 4 டால்பின் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் மழையை பொருட்படுத்தாமல் இரவிலும் கரை ஒதுங்கியவாறு இருந்த டால்பின் மீன்களை மீனவர்கள் கடலுக்குள் கொண்டு சென்று விடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ரஞ்சித் தலைமையிலான குழுவினர் மற்றும் மாவட்ட வன அலுவலர் சம்பத், திருச்செந்தூர் தாசில்தார் அழகர், புன்னக்காயல் கடற்கரையில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ரஞ்சித் கூறுகையில், டால்பின் மீன்கள் கூட்டமாக அணி வகுத்து செல்லக் கூடியவை. கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக டால்பின் மீன்கள், ஆழம் குறைவான கடற்கரை பகுதிக்கு கரை ஒதுங்கி இருக்கலாம்.

அவைகளை ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று விட்டாலும், அவைகளால் நீந்தி செல்ல முடியாமல் மீண்டும் கரை ஒதுங்கி இருக்கிறது. எனவே கரை ஒதுங்குகிற பெரும்பாலான டால்பின் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது வழக்கமான ஒன்று தான். சுமார் 30-க்கும் மேற்பட்ட டால்பின் மீன்களை காப்பாற்றி கடலுக்குள் தள்ளிவிட்ட இப்பகுதி மீனவர்களை பாராட்டுகிறேன் என்றார்.

இறந்த டால்பின் மீன்களை தூத்துக்குடி மாவட்ட கால்நடை துறை டாக்டர்கள் குழுவினர் பார்வையிட்டு பரிசோதனை செய்து புதைத்தனர்.