செய்திகள்

லடாக் எல்லையில் இந்திய, சீன வீரர்கள் இடையே மோதல்

லடாக் எல்லையில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய, சீன வீரர்களிடையே லேசான தகராறு ஏற்பட்டது.

மாலை மலர்

லடாக்: 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கில் சீன எல்லையை ஒட்டி உள்ளது பாங்காங் ஏரி. இந்த ஏரி சீன எல்லை வரை நீண்டு காணப்படுகின்றது. ஏரியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிற்கும், மீதமுள்ளது சீனாவுக்கும் சொந்தமானது. இந்த ஏரியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் படகுகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம். 

இந்த நிலையில், பாங்காங் ஏரியில் படகில் இருநாட்டு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருதரப்பினரிடையே லேசான வாய்ச்சண்டை ஏற்பட்டது. சீன வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை.

சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய வீரர்கள் விடுத்த அழைப்பை சீன ராணுவ வீரர்கள் நிராகரித்ததாக கூறப்படுகிறது. 

2015-ம் ஆண்டுக்கு பிறகு ஆகஸ்ட் 15-ம் தேதி சந்திப்பு இந்த ஆண்டு தான் நடைபெறவில்லை. அதேபோல், சீன ராணுவ தொடக்க நாளை முன்னிட்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடைபெறும் சந்திப்பும் இந்த ஆண்டு நடைபெறவில்லை.

சீக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் அத்துமீறல் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக கருதப்படுகிறது.