வெறிநாய்கள் கடித்ததில் பலியான ஆடுகள். 
செய்திகள்

புளியங்குடியில் வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

புளியங்குடியில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 8 ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்தன.

மாலை மலர்

புளியங்குடி:

புளியங்குடி லெப்பை சாகிப் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேக்முகம்மது (வயது 60). இவர் கொட்டகை அமைத்து ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்ல எழுந்துள்ளார். அப்போது ஆட்டுக்கொட்டகையின் வெளியே 7 ஆடுகள் வெறிநாய்கள் கடித்துக் குதறிய நிலையில் ரத்தவெள்ளத்தில் செத்துக் கிடந்தன. 

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கொட்டகைக்குள் சென்று பார்த்தபோது நாய்கள் கடித்த நிலையில் ஆட்டுக்குட்டி ஒன்று உயிருக்கு போராடியது. அதுவும் சிறிது நேரத்தில் இறந்தது. இது குறித்து சேக்முகம்மது மற்றும் அங்கு வந்த மேலப்புளியங்குடி விவசாயிகள் சங்கத்தலைவர் அப்துல்வகாப் உடனடியாக நகராட்சி சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

புளியங்குடி நகராட்சி பகுதியில் உரிமம் இல்லாமல் வளர்க்கும் நாய்கள் பல வெறி நாய்களாக திரிவதுடன் மக்களை அச்சுறுத்தி கடித்து விடுகின்றன. எனவே நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெறிநாய்களால் கடிபட்டு இறந்த ஆடுகளின் உரிமையாளர் சேக்முகம்மதுவிற்கு நிவாரணம் வழங்கவேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.