செய்திகள்

ஆத்தூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பூட்டை உடைத்து ஆவணங்கள் கொள்ளை - மர்ம நபர்கள் அட்டகாசம்

ஆத்தூர் சட்டமன்ற அலுவலக கதவு பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் ஆவணங்களை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சின்னதம்பி. அ.தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது சட்டமன்ற அலுவலகம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் உள்ளது. அதனைச்சுற்றி மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை எம்.எல்.ஏ. அலுவலகத்தை சுத்தம் செய்வதற்காக பெண் ஒருவர் சென்றார். அப்போது எம்.எல்.ஏ. அலுவலகத்தின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சின்னதம்பி எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற அவர் ஆத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

பின்னர் சின்னதம்பி எம்.எல்.ஏ. சட்டமன்ற அலுவலகத்திற்குள் சென்று பார்த்தபோது உள்ளிருந்த பீரோ மற்றும் ட்ராயர் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.

தகவலறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பீரோ மற்றும் மேஜை ட்ராயரில் இருந்த ஆவணங்கள் மாயமாகி இருந்தது. பணம் ஏதுவதாது இருக்கும் என்று வந்த கொள்ளையர்கள் பணம் இல்லாததால் ஆவணங்களை திருடிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தகவலறிந்த ஏரளாமானோர் அங்கு திரண்டனர். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனது அலுவலகத்தில் 3 பூட்டுகளை உடைத்து பீரோ மற்றும் ட்ராயரில் பணம் ஏதும் இருக்கிறதா என்று கொள்ளையர்கள் பார்த்து உள்ளனர். நான் பணம் ஏதும் வைக்கவில்லை. இதனால் அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.