செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டம் - நோயாளிகள் கடும் அவதி

மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் இணையான ஊதியம் வழங்கக்கோரி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #DoctorsStrike

மாலை மலர்

தமிழகத்தில் அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் சுமார் 18 ஆயிரத்து 600 டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் இணையான ஊதியம் வழங்கக்கோரி போராடி வருகிறார்கள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னையில் 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். டாக்டர்களின் போராட்டத்தால் புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.

டாக்டர்கள் சிகிச்சை வராததால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். உதவி மருத்துவர்கள் மட்டுமின்றி முதுகலை பட்டதாரி மாணவர்கள், உதவி பேராசிரியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் புறநோயாளிகள் பிரிவு முடங்கியது. காலை 8 மணி முதல் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவுகள் வழக்கமாக செயல்படும்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து காத்து நின்றனர். டாக்டர்கள் வராததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 350 டாக்டர்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 400 டாக்டர்கள் என 750 டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தள்ளி வைக்கப்பட்டதால், அரசு டாக்டர்களும் தங்கள் வேலை நிறுத்தத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து டாக்டர்கள் பணிக்கு வந்தனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 600-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் காலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் அவர்கள் பணிக்கு சென்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புற நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப் பட்டார்கள். பலர் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர் உள்பட 10 அரசு ஆஸ்பத்திரிகள், 70 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் இன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். #DoctorsStrike