பி.எஸ்.ஞானதேசிகன் 
செய்திகள்

திரைப்படங்களில் இந்தியாவை சிறுமைப்படுத்தும் வசனங்களை பேசக்கூடாது: தமிழ் மாநில காங்கிரஸ்

திரைப்படங்களில் இந்தியாவை சிறுமைப்படுத்தும் வசனங்களை பேசக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் வேண்டுங்கோள் விடுத்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘மெர்சல்’ திரைப்படத்தில் 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை, சென்னை அளவே உள்ள 57 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூருடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டு இருக்கிற வசனம் தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.

சிங்கப்பூரில் எல்லா ஏழை மக்களுக்கும் இலவச மருத்துவ வசதி கிடையாது. எனவே உண்மை தெரியாமல் திரைப்படங்களில் வசனங்களை எழுதுவது தான் இந்த பிரச்சினைக்கு மூலக்காரணம். இதில் வசனம் எழுதியவரைத் தான் சுட்டிக்காட்ட முடியுமே தவிர பேசுகிற நடிகரை அல்ல.

நாம் வாழ்கிற நாட்டை சிறுமைப்படுத்துகிற வசனங்கள் திரைப்படங்களில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வசனங்களை பேசுவதற்கு நடிகர்களும் மறுக்க வேண்டும். இந்தியனாக, இந்தியாவின் வளர்ச்சியில் பெருமை கொள்வோம். இந்த பிரச்சினைக்கு இத்துடன் அனைவரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.