எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் மோடி (காணொலி காட்சி) 
செய்திகள்

தமிழகத்தில் மே 31 வரை ரெயில், விமான சேவைகளை தொடங்க வேண்டாம் - பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் பயணிகள் ரெயில் மற்றும் விமான சேவைகளை மே 31-ம் தேதி வரை தொடங்க வேண்டாம் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், ஊரடங்கு தளவர்வு, கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்தி ரெயில், விமான சேவைகளை மீண்டும் இயக்கலாமா? என பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்மந்திரிகளின் கருத்துக்களை கேட்டார்.

அப்போது காணொலியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கொரோனா வைரஸ் பரவும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மே 31-ம் தேதி வரை பயணிகள் ரெயில் மற்றும் விமானச்சேவைகளை தமிழகத்தில் தொடங்க வேண்டாம் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதற்கிடையில், கொரோனா சிகிச்சைக்காக மருந்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தற்காலிக நிதியாக ரூபாய் ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.