சென்னை:
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல, தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்குகளுக்கு மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. சுப்ரீம் கோர்டடு பிறப்பிக்கும் உத்தரவின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மனுதாரர்கள், சுப்ரீம் கோர்ட்டை அணுகும்படி உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு வர உள்ள வழக்கு குறித்த விவரத்தை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தி.மு.க. தரப்பு வக்கீல் பி.வில்சன், ‘மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு பதில் மனுவில் கூறியுள்ளது. ஆனால், உத்தரவு எதுவும் பெறாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒரு நீதி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஒரு நீதியா?’ என்று கேள்வி எழுப்பினார்.
பிற மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்களும் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 9-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.