செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?: அமைச்சருடன் தி.மு.க. வாக்குவாதம்

தமிழக சட்டசபையில் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்றது. அப்போது உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பாக அமைச்சருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

சட்டசபையில் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்றது.

இதில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (தி.மு.க.) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்:- ஊராட்சி செயல்பாட்டால்தான் அரசு செயல்பட்டதாக அர்த்தம். கடந்த 9 மாதமாக உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவில்லை. அரசு செயல்பட்டாலும் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் தெருவிளக்கு, குப்பை பிரச்சனைகள் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு கூறினால் நீங்கள் கோர்ட்டை காரணம் கூறி வழக்கு உள்ளது என்கிறீர்கள்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி:- அம்மாவின் அரசு உள்ளாட்சி தேர்தலை குறித்த காலத்தில் நடத்தி முடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருந்ததால் தேர்தல் தாமதம் ஆனது.

முதலில் தி.மு.க.தான் வழக்கு தொடர்ந்தது. அதை கோர்ட்டு தள்ளுபடி செய்த பிறகு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தனர். மாநில தேர்தல் ஆணையம் நடத்த அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு இடஒதுக்கீட்டை காரணம் காட்டி தேர்தலை கோர்ட்டு நிறுத்தியது.

இப்போது பழங்குடியினருக்கு அதிக இட ஒதுக்கீடு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதை கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டி உள்ளது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்:- எங்களை குறை கூறாமல் நீங்கள் தேர்தலை நடத்துங்கள்.


மு.க.ஸ்டாலின்:- தேர்தலை தி.மு.க.தான் நிறுத்தியது என்று குற்றம் சாட்டுகிறார். தேர்தல் ஆணையமே கோர்ட்டில் வாய்தா வாங்குகிறது. தேர்தல் நியாயமாக நடக்கவே நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். தேர்தலை முறைப்படுத்தி நடத்துங்கள் என்றுதான் கூறுகிறோம். நாளையே உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் அதை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி:- உள்ளாட்சி தேர்தலை நடத்த அம்மா அரசு அன்றைக்கும் தயாராக இருந்தது. என்றைக்கும் தயாராக உள்ளது. எப்போது தேர்தல் நடந்தாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள்தான் வெற்றி பெறு வோம்.