செய்திகள்

தி.மு.க.வுக்கு வாக்கு குறைந்தது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும்: மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்கு குறைந்தது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாலை மலர்

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணத்தை வாரி.. வாரி.. இறைத்த இருதரப்பில் ஒரு தரப்பு வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ஜனநாயகத் தேர்தல் களத்தை நியாயமான முறையில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சந்திக்க வேண்டும் என்கிற உறுதியுடன், தி.மு.க. ஜனநாயக நெறிகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றி செயல்பட்டதற்கு கிடைத்துள்ள பரிசுதான், ஆர்.கே.நகரில் கிடைத்துள்ள பின்னடைவு.

2 அணிகளாய்ப் பிரிந்து நின்றவர்கள் கொட்டிக் கொடுத்த தொகையினால், தி.மு.க. வேட்பாளரின் டெபாசிட் தொகையும் பறிபோயிருக்கிறது. தி.மு.க.வின் இடைத்தேர்தல் தோல்வியைப் பார்த்து எக்காளமிடுபவர்கள், ஏளனம் செய்பவர்கள் இந்தத் தேர்தலில் நடந்த அத்துமீறல்களையும் துஷ்பிரயோகங்களையும் மறைப்பதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோகிறார்கள். காரணம், ஆர்.கே.நகரில் தோற்றது, தி.மு.க அல்ல; இந்தியாவின் பெருமை எனக் கொண்டாடப்படும் மிகப் பெரிய ஜனநாயகம்.

ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் என விலை நிர்ணயித்து வழங்கிய ஆட்சியாளர்களையும், 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்களித்தபின் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்த ஹவாலா அரசியல்வாதிகளையும் தேர்தல் ஆணையம் சிறிதும் கண்டுகொள்ளவே இல்லை. அரசு இயந்திரத்தை, குறிப்பாக காவல்துறையிலும் அதன் பிரிவான உளவுத்துறையிலும் உள்ள தங்கள் சமுதாயத்து அதிகாரிகள் மூலமாக ஜனநாயகத்தை விலைபேசும் செயல்பாடுகள் கச்சிதமாக நடந்து முடியும்வரை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தது.

விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்த வெற்றி என்பது அவர்களுக்கு வெகுமானமல்ல, பெரிய அவமானம். அதே நேரத்தில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளுக்கு விலை பேசக்கூடாது என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையை கடைப்பிடித்த தி.மு.க. தோல்வியடைந்திருப்பது லட்சிய ரீதியான தன்மானம்.

வெற்றி பெற்றால் வெறிகொண்டு ஆடுவதுமில்லை, தோல்வி கண்டால் துவளுவதுமில்லை என்பதே தலைவர் கருணாநிதி நமக்குக் கற்றுத் தந்துள்ள அரசியல் பாடம். இமயமே சரிந்தாலும் நிலைகுலையாமல் நெஞ்சுறுதியுடன் நிற்கும் தி.மு.க. எனும் பேரியக்கத்திற்கு இடைத்தேர்தல் சறுக்கல் கள் சாதாரணமானவை.

இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் வரவேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், அதில் தி.மு.க.வின் வெற்றி உறுதியாக எழுதப்பட்டுள்ளதால், எப்படியாவது அதனைத் தகர்த்துவிடவேண்டும் என இடைத்தேர்தல் முடிவுகளை கொண்டு தி.மு.க.வை பலவீனப்படுத்த நினைக்கும் ஆதிக்க சக்திகளைக் கண்டு சிறிதும் மயங்கிட வேண்டியதில்லை.

அறிஞர் அண்ணாவின் வழியில் தலைவர் கருணாநிதி கட்டிக்காத்த இந்த கழகத்தை யாராலும் எந்தக் காலத்திலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. இமயத்தை வாயால் ஊதிச் சாய்த்திட இயலுமா?.

பணம் விளையாடிய இந்த இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க. சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், வகுக்கப்பட்ட வியூகங்கள், அவை செயல்படுத்தப்பட்ட விதம், எங்கெங்கே கவனக்குறைவு, எவரெவரிடம் அலட்சியம், தி.மு.க. வாக்குகளில் ஏற்பட்ட சரிவு இவை அனைத்தும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

பயிர் விளையும் கழனியில் உள்ள களைகள் அகற்றப்பட்டு, ஆயிரங்காலத்துப் பயிரான தி.மு.க. எந்நாளும் காப்பாற்றப்படும்.