செய்திகள்

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

மாலை மலர்

ரே‌ஷன் கடைகளில் இந்த மாதம் முதல் சர்க்கரையின் விலை 13 ரூபாய் 50 காசில் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏழை நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளதாக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தமிழக அரசை கண்டித்து முதலில் தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 6-ந்தேதி ரேசன் கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக இருந்தது.

அந்த சமயத்தில் கடும் மழை வெள்ளம் ஏற்பட்டதால் நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக ஆர்ப்பாட்டத்தை 22-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேசன் கடைகள் முன்பும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ், மற்றும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மட்டும் 1,200 ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்க்கரை விலையை குறைக்க கோரி முழக்கமிட்டனர்.

சென்னை மேற்கு மாவட்டத்தில் 81 ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள அமுதம் நியாய விலைக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவருடன் பகுதிச் செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், வட்ட செயலாளர் கண்ணதாசன், மீனவரணி செயலாளர் வி. பி.பொன்னரசு, கென்னடி, கண்ணதாசன், பிரகாஷ், ஆனந்த், சசிகுமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகுதி செயலாளர் சேப்பாக்கம் மதன்மோகன் சிந்தாதிரிப்பேட்டையிலும், பகுதி துணை செயலாளர் பா.சிதம்பரம் ஸ்டார் தியேட்டர் அருகே தானா பாக் தெருவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு பிராட்வே டக்கர் தெரு - பிரகாசம் தெரு சந்திப்பில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு உள்பட மொத்தம் 72 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வில்லிவாக்கத்தில் உணவு பொருள் வழங்கல் துறை உதவி கமி‌ஷனர் அலுவலகம் முன்பு ரங்கநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டை வி.வி.கோவில் தெருவில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.


அவருடன் கிருஷ்ண மூர்த்தி, நாகா உள்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு மொத்தம் 72 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் ஆர்.கே. நகர் தொகுதியில் கொருக்குப்பேட்டை மூப்பனார் நகரில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தி.மு.க.வினர் கோவூரில் உள்ள ரேசன் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, படப்பை ராஜேந்திரன், கண்ணதாசன், குமார வேல், சுதாகர் பங்கேற்றனர்.

பல்லாவரம் மலங்கா நந்தபுரம் நியாய விலைக் கடை முன்பு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ரஞ்சன், ராஜா, தீனதயாளன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தாம்பரத்தில் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


செங்கல்பட்டு ஆலப்பாக்கத்தில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, திருமலை ஈசுவரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.