கரூர்:
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்து சிறுபான்மையினரை தனிமைப்படுத்திய மத்திய அரசையும், தமிழர் விரோத செயல்கள் அனைத்திற்கும் ஆதரவளித்து வரும் தமிழக அரசையும் கண்டித்து கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார். முன்னதாக மத்திய நகர செயலாளர் எஸ்.பி. கனகராஜ் வர வேற்றார்.
இதில் மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னிர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் ம. சின்னசாமி, சட்டத்துறை இணை செயலாளர் வக்கீல் மணிராஜ், நெசவாளர் அணி செயலாளர் பரணி கே. மணி, ராமர் எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் கரூர் முரளி, சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜான், வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளவரசு, ஒன்றிய செயலாளர் கந்தசாமி, கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர்கள் ரமேஷ்பாபு, மகேஸ்வரி, தாரணி சரவணன், கோல்டு ஸ்பாட் ராஜா, தம்பி எஸ். சுதாகர், இளைஞரணி திருநாவுக்கரசு மற்றும் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேப்போல் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.