செய்திகள்

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தி.மு.க. மனுவை வாபஸ் பெற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுப்பு

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறும் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.

மாலை மலர்

புதுடெல்லி:

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறும் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை செய்து, சுழற்சி முறை இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். இத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாட்டை கட்டாயமாக்க வேண்டும். தேர்தல் பணிகளை மாநில அரசு ஊழியர்களிடம் ஒப்படைக்காமல் மத்திய அரசு ஊழியர்களை கொண்டு நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

தி.மு.க.வின் மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி தள்ளுபடி செய்தது.

சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும்வரை உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முடிய 6 மாத காலம் ஆகும்’ என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் நடத்த ஆகும் தாமதமே தமிழக ஆட்சியில் குழப்பங்கள் இருப்பதை காட்டுகிறது’ என்று கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில், இந்த பிரச்சினை தொடர்பான மூல மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் மனுவை திரும்ப பெற கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கினை முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்குவோம் என்றும், செப்டம்பர் 6-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.