கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்குமாறு கனிமொழி எம்.பி. நேரில் விடுத்த அழைப்பை நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா, ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பீகார் மாநில அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக, தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று பாட்னாவுக்கு சென்றார். ஐக்கிய ஜனதாதள தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கு வருமாறு அழைப்பிதழ் கடிதத்தை வழங்கினார். மேலும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிதிஷ் குமாருடன் பேச வைத்தார்.
அழைப்பை ஏற்றுக் கொண்ட நிதிஷ் குமார், கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதாக உறுதி அளித்தார். இத்தகவலை கனிமொழியை நிதிஷ் குமார் இல்லத்துக்கு அழைத்துச் சென்ற ஐக்கிய ஜனதாதள பொதுச்செயலாளர் கே.சி.தியாகி தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை ஆதரிப்பது என்று ஐக்கிய ஜனதாதளமும், தி.மு.க.வும் ஒருமித்த கருத்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர்களும், முன்னாள் முதல்-மந்திரிகளுமான லாலுபிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோரின் இல்லத்துக்கும் கனிமொழி எம்.பி. சென்றார். கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட லாலுபிரசாத் யாதவ், விழாவில் பங்கேற்பதாக உறுதி கூறினார். கருணாநிதி எப்போதும் தன் மீது அன்பும், பிணைப்பும் கொண்டவர் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர், கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடுதழுவிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிதிஷ் குமாரின் முயற்சிகளை வரவேற்கிறேன். தமிழ்நாட்டு விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதையும், தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தியை திணிக்க முயற்சிப்பதையும் தி.மு.க. எதிர்க்கிறது.