செய்திகள்

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

ஆளுநர் வித்யாசகர் ராவுடன் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் உடன் சென்றனர்.

மாலை மலர்

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், முதல்வர் எடப்பா மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாகவும் கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதங்கள் மீது ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது முடிவை தெரிவிக்காமல் மும்பை சென்றார்.

இந்த நிலையில், ஆளுநர் நேற்று மும்பையில் இருந்து சென்னை வந்ததையடுத்து, அவரை சந்திக்க தி.மு.க. நேரம் கேட்டது. இதனையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 10.30 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அவருடன் கனிமொழி, எஸ்.ஆர்.பாரதி ஆகிய எம்.பி.க்கள், திமுக கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், ராஜேந்திரன் ஆகியோரும் உடன் சென்றனர்.