செய்திகள்

சட்டசபையில் மீனவர் பிரச்சனையில் அமளி: ஜெ.அன்பழகன் வெளியேற்றம்- தி.மு.க. வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் மீனவர் பிரச்சனை குறித்து அமளியில் ஈடுபட்டதால் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வெளியேற்றப்பட்டார். இதை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாலை மலர்

சட்டசபையில் இன்று தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடந்தது.

உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, எல்லை தாண்டும், திசை மாறும் மீனவர்களை இலங்கை கடற்படை பிடிக்கும் போது, பத்திரமாக தமிழகத்துக்கு கொண்டு வரவேண்டும், அவர்களது படகு சேதபடுத்தக் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார்.

அப்போது கே.பி.பி.சாமி (தி.மு.க.) உட்கார்ந்து கொண்டே பேசுகையில், அமைச்சர் அழுத்தம் கொடுப்பதாக கூறுகிறார். படகுகளை மூழ்கடிக்கத்தான் அழுத்தம் கொடுக்கிறார் என்றார்.

உடனே அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா ஆட்சியின்போதுதான் 357 படகுகள் மீட்கப்பட்டன. மீனவர்களையும் பத்திரமாக கொண்டு வந்தார். ஆனால் உங்கள் (தி.மு.க.) ஆட்சியின்போது இலங்கை கடற்படை சுடுவான். மீனவர்கள் சாவார்கள். இதுதான் நடந்து வந்தது.

அம்மா ஆட்சியில் பிடிக்கப்பட்ட படகுகளை மீட்டு வந்து இருக்கிறோம். கொண்டுவர முடியாத படகுகளுக்கு கூட தலா ரூ.5 லட்சம் கொடுத்து சரி செய்துள்ளோம். எனவே நாங்கள் அழுத்தம் கொடுத்ததுபோல் நீங்களும் எங்களுடன் வாருங்கள். டெல்லியில் போய் பேசலாம் என்றார்.

அப்போது கே.பி.பி.சாமி, மீண்டும் பதில் கூற எழுந்தார். துணை சபாநாயகர் அவருக்கு அனுமதி மறுத்தார். இதனால் தி.மு.க.வினர் கே.பி.பி.சாமி பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அனுமதி கொடுக்காததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ஜெயக்குமார்:- உங்கள் ஆட்சியின்போது எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று உங்கள் தலைவர் கூறினார்.

இதனால் சபையில் மேலும் அமளி ஏற்பட்டது. ஜெ.அன்பழகன் கையை நீட்டி பேச வாய்ப்பு கேட்டார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, “ஜெ.அன்பழகன் குழப்பம் விளைவிப்பதற்காக அவர் இருக்கையை விட்டு எழுந்து முன்னால் வந்து பேசுகிறார். இது தவறானது, சரியல்ல” என்றார்.

ஆனாலும், ஜெ.அன்பழகன் முன் சீட்டுக்கு வந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவை முன்னவர் செங்கோட்டையன் துணை சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.

உடனே ஜெ.அன்பழகனை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு துணை சபாநாயகர் உத்தரவிட்டார். முதல்-அமைச்சர் பேசும் போது, ஜெ.அன்பழகன் கட்டுப்பாடு இன்றி குந்தகம் விளைவித்ததால் வெளியேற்றுவதாக துணை சபாநாயகர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சபை காவலர்கள் உள்ளே வந்து ஜெ.அன்பழகனை வெளியேற்றினர்.

துரைமுருகன் எழுந்து ஜெ.அன்பழகன் வெளியேற்றப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

அதற்கு முதல்-அமைச்சர் கூறுகையில், சபையில் உங்கள் கட்சி கொறடா, துணை தலைவருக்கும் கட்டுப்பட மறுக்கிறார். துணை சபாநாயகர் பேச்சையும் கேட்க மறுக்கிறார். அதனால் அவரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதே தவிர யாரையும் வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. இதில் உள்நோக்கம் கிடையாது என்றார்.

ஆனால் துரைமுருகன், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினார். ஜெ.அன்பழகனுக்கு பேச வாய்ப்பு கொடுக்காததால் ஒரு அடி முன்னேறி வேகத்துடன் வந்தார் என்றார்.


இதை துணை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று ஒருநாள் மட்டும் ஜெ.அன்பழகன் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று எங்கள் தலைவர் சொன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதால் தான் அதற்கு பதில் அளிக்க வாய்ப்பு கேட்டோம். அந்த கால கட்டத்தில் கே.பி.பி. சாமிதான் மீன்வளத்துறை அமைச்சர். அவர் அதற்கு பதில் சொல்ல வாய்ப்பு கேட்டோம்.

அதற்கு துணை சபாநாயகர் மறுத்தார். எங்கள் தலைவர் பற்றி எந்த ஆதாரமும் இன்றி ஜெயக்குமார் பேசுகிறார். அந்த வார்த்தையை நீக்க சொன்னோம். அதற்கு துணை சபாநாயகர் செவி சாய்க்கவில்லை. எங்கள் மீது அபாண்டமாக குற்றம் சாட்டும்போது அமைதியாக இருந்தால் வெளியே தெரியாது. எங்கள் குமுறலை கொட்டித் தீர்க்கவே நாங்கள் வாய்ப்பு கேட்கிறோம். ஆனால் அது மறுக்கப்படுவதால் வெளிநடப்பு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.