சென்னை:
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கேரளாவில் கனமழையாலும், பெரு வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பொதுமக்கள், தி.மு.கழகத்தினர் நிவாரண உதவி வழங்கிடக்கோரி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் கனமழையிலும், பெரு வெள்ளத்திலும் சிக்கி இதுவரை 83 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கிறார்கள், 60 பேர் வரை காணாமல் போய் இருக்கிறார்கள். சுமார் 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அண்டை மாநில மக்கள் என்கிற முறையில் நாமும் இத்துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அம்மக்களுக்கு உதவிடும் முயற்சிகளை தி.மு.க முன்னெடுக்கிறது.
எனவே, பொதுமக்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான நிவாரணப் பொருட்களை தி.மு.க. தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்திடக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.