திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மகள் திருமணம் கொரடாச் சேரியில் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசும் போது கூறியதாவது:-
ஜனநாயகத்தை காப்பாற்ற உங்களில் ஒருவனாக இருப்பேன். பதவியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் ஏழை எளிய மக்களுக்கு பணியாற்றுவேன்.
நீட்தேர்வு காரணமாக ஏழை எளிய மாணவர்களின் டாக்டர் ஆசை கனவாகிவிட்டது. எடப்பாடி தலைமையிலான அரசு மக்களின் ஆதரவை இழந்து விட்டது. ஆனால் அவர்கள் பதவி மோகம் காரணமாக ஆட்சியிலிருந்து மீண்டும் ஊழல் செய்ய முயற்சிக்கின்றனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் எடப்பாடி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் தி.மு.க வினரும் இன்று கவர்னரை சந்தித்து உள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள் குட்கா தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனை தெரியப்படுத்தவே சட்ட மன்றத்திற்குள் நாங்கள் குட்காவை எடுத்து சென்று தடையின்றி விற்பனையாவதை எடுத்து கூறி விளக்கினோம். ஆனால் குட்காவை சட்ட மன்றத்திற்குள் எடுத்து சென்றது தொடர்பாக உரிமை மீறல் குறித்து உரிமை மீறல் குழுவுக்கு எடுத்து செல்லப்பட்டது.
தற்போது எடப்பாடி அரசு மைனாரிட்டி அரசாக மாறி வருகிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே அதிருப்தி அடைந்து ஆதரவை விளக்கி கொண்டுள்ளனர். இதனால் எதிர்கட்சி உள்பட அனைத்து கட்சியினரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னரிடம் வலியுறுத்தி உள்ளோம்.
இதனால் முன்னெச்சரிக்கையாக தங்களது மைனாரிட்டி அரசை காப்பாற்றி கொள்வதற்காக எடப்பாடி தலைமையிலான அரசு தி.மு.க. மீது வீண்பழி சுமத்தி சதி செய்து குட்கா விவகாரத்தை கையில் எடுத்து உள்ளது. இதன் மூலம் உரிமை மீறல் பிரச்சினை எழுப்பி தி.மு.க. வினர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கலாம்.
இதனால் தங்களது அரசை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தப்பு கணக்கு போடுகின்றனர். அப்படி தி.மு.க.வினர் மீது உரிமை மீறல் குழுவில் நடவடிக்கை எடுத்தால் நாங்கள் சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம். ஆனால் ஆட்சி நீடிக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து கொல்லை புறமாக நுழைய விரும்பவில்லை. தி.மு.க. நேரடியாக தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும்.
தற்போதைய எடப்பாடி அரசு பன்னீர்செல்வத்துடன் இணைந்து மத்திய அரசுக்கு மண்டியிடும் மானங்கெட்ட அரசாக மாறிவிட்டது. உரிமை மீறல் குழு கூடி உள்ளது. அதுபற்றி எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.