செய்திகள்

ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு- திருச்சி கோர்ட்டில் தேமுதிக நிர்வாகி ஆஜர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி கோர்ட்டில் தேமுதிக நிர்வாகி இன்று ஆஜரானார். #Jayalalithaa #ADMK #DMDK

மாலை மலர்

திருச்சி:

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே. மு.தி.க. கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆளுங்கட்சியானது. 29 எம்.எல்.ஏ.க்களை பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சியானது.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விதிமுறைகளை மீறியதாக அப்போதைய தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களான திருவெறும்பூர் செந்தில்குமார், பார்த்தீபன், சந்திரகுமார் உள்பட 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

அதனை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருவெறும்பூரில் 30.3.2013 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அப்போதைய தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளராக இருந்த ஏ.ஆர்.இளங்கோவன் பங்கேற்று பேசினார்.

அவர் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றியும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும் விமர்சித்து பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து முதல்வரை பற்றி அவதூறாக பேசியதாக இளங்கோவன் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.இளங்கோவன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஏ.ஆர்.இளங்கோவன் தற்போது சேலம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக உள்ளார். கோர்ட்டில் ஆஜராக வந்த அவருடன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால், சரவணன், பெருமாள், பகுதி செயலாளர் நூர்முகமது உள்பட பலர் உடன் வந்தனர். #Jayalalithaa #ADMK #DMDK