தஞ்சை மாவட்ட நியமன அலுவலர் இனிப்பு கடையில் ஆய்வு செய்தபோது எடுத்த படம் 
செய்திகள்

தீபாவளி பண்டிகை: தஞ்சையில் இனிப்பு-பலகார கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட, தஞ்சை மாவட்ட நியமன அலுவலர் தனியார் இனிப்புக் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி இனிப்பு பலகார கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் உணவு மற்றும் உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட தஞ்சை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் இனிப்பு கடைகள் மற்றும் வீடுகளில் தயாரிக்கப்படும் பலகாரங்கள் தரமானதாக உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தஞ்சை தெற்கு வீதியில் உள்ள ஒரு தனியார் இனிப்புக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார தின்பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். ஸ்வீட் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விவரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி உணவு பொருளின் பெயர் தயாரிப்பு பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம் சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உணவுப் பொருட்களை ஈக்கள் பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்துறை பதிவுசெய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறு பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை ஒரு சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.