ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த 14 வயது சிறுமியை, கொளகூர் மலை கிராமத்தை சேர்ந்த சக்தி (வயது 23), சித்தையன் (26) ஆகியோர், கடந்த 7-ந் தேதி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதை தட்டிக்கேட்ட அந்தப் சிறுமியின் தந்தையை, சக்தி அரிவாளால் வெட்டியதில், அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து சிறுமியின் தாயார், இதுபற்றி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சக்தி மற்றும் சித்தையன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சக்தியை கடந்த 8-ந் தேதி போலீசார் கைது செய்த நிலையில், மற்றொரு குற்றவாளியான சித்தையன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று சித்தையன் அவரது வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொண்டலாம்பட்டி போலீசார், கரடியூர் கிராமம், பஸ் நிறுத்தத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த சித்தையனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.