கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி மையங்களுக்கு இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படுமா?

மாவட்ட அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் செயல்வழி கற்றலுக்காக ‘டி.வி.’க்களை பயன்படுத்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

உடுமலை:

கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது திருப்பூருக்கு வழங்கப்பட்ட இலவச கலர் ‘டிவி’க்கள், நஞ்சப்பா மற்றும் பழனியம்மாள் பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்டிருந்தன.

தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடந்த  10 ஆண்டுகளாக டி.வி.க்கள்  அனைத்தும் வகுப்பறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மாவட்ட அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் செயல்வழி கற்றலுக்காக ‘டி.வி.’க்களை பயன்படுத்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

அவ்வகையில் உடுமலை ஒன்றியத்தில் 143 மையங்கள், மடத்துக்குளம் ஒன்றியத்தில் 77 மையங்கள், குடிமங்கலம் ஒன்றியத்தில் 75 மையங்கள் என 295 அங்கன்வாடி மையங்களுக்கும் ‘டி.வி’க்கள் வழங்கப்பட்டுள்ளன.

கேபிள் இணைப்பு வழங்கப்படாத காரணத்தால்  பணியாளர்களின் சொந்த செலவில் ‘டி.வி.டி.’ வாயிலாக கார்ட்டூன், சிறுவர் படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பெற்றோர் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் அங்கன்வாடி மையங்களில் கலர் ‘டிவி’ பயன்பாடு தொடங்கியுள்ளது.

இதேபோல்  இலவச கேபிள் இணைப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் வாயிலாக குழந்தைகள் பயன்பெறுவர் என்றனர்.

SCROLL FOR NEXT