தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம்,சோலவண்டியான் வளவு பகுதியில் ஓடும் சரபங்கா நதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக, பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து வி.ஏ.ஓ ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பிணத்தை மீட்டனர்.
போலீசார் விசாரணை யில், இறந்தவர் இடங்கணசாலை அருகிலுள்ள பாப்பாப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் சங்கர் (வயது 45), நெசவு தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த சங்கருக்கு, சுலோச்சனா என்ற மனைவியும் , 2 மகன், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள சங்கர், கடந்த 21-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பாத நிலையில் நேற்று சரப்பங்கா நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சங்கர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையில் இறந்தாரா என்பது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.