வடமதுரை:
திண்டுக்கல் அருகே கம்பிளியம்பட்டி ஆண்டிப்பட்டி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் பேனல் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக கிராமத்தில் மின்கம்பங்கள் ஊன்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்படும்.
எனவே மாற்றுவழியில் மின்கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என கிராமமக்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திடீரென ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.