கொலை செய்யப்பட்ட ஆனந்த பாண்டி  
உள்ளூர் செய்திகள்

நாசரேத்தில் அலுவலகத்தில் புகுந்து கொலை-மின் வாரிய ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் சிக்கினர்- தந்தை சாவுக்கு பழிதீர்த்ததாக தகவல்

கடந்த 21-ந் தேதி பணிக்கு சென்ற மின்ஊழியர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அந்தோணி ராஜை பழி தீர்ப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

நாசரேத்:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஆனந்த பாண்டி (வயது 51). இவர் நாசரேத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 21-ந் தேதி பணிக்கு சென்ற இவர் மறுநாள் அலுவலக வளாகத்திற்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

மின் வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனந்த பாண்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் நாசரேத் அருகே உள்ள குப்பாபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்ற வாலிபர் சிக்கினார். இவரது தந்தை அதே மின் வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்துள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்சாரத்தில் அடிபட்டு இறந்துள்ளார்.

இதற்கு ஆனந்த பாண்டி தான் காரணம் என அந்தோணி ராஜ் கருதி உள்ளார்.

இந்த ஆத்திரத்தில் அவர் அந்தோணி ராஜை பழி தீர்ப்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக அந்தோணி ராஜிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் மூக்குப்பீறி பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.