கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தவசு (வயது 26). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அவர் தெரிவிக்கையில், எங்கள் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் தொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாக கூறினர்.

அதனை நம்பி நானும் என்னைப் போன்ற ஏராளமான மாற்றுத்திறனாளிகளும் அங்கு அணுகி ஆவணங்களை வழங்கினோம். மேலும் ரூ.7 லட்சம் வரை பணம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் சொன்னபடி கடன் பெற்றுத் தரவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

எனவே இன்று கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனை தொடர்ந்து அவரை புகார் மனு அளித்துச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள சின்னபள்ளபட்டியை சேர்ந்த தென்னரசு (வயது 51) என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் தெரிவிக்கையில், என்னுடன் பிறந்த 3 சகோதரர்கள் உள்ளனர்.

அண்ணன் முருகபாண் டிக்கு திருமணமாகவில்லை. இதனால் அவரை ஏமாற்றி எனது தம்பி சரவணன் அவரது சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு அபகரித்துக் கொண்டார். தற்போது எனது அண்ணன் முருகபாண்டி மிகுந்த வறுமையான நிலையில் உள்ளார். எனவே எனது தம்பி அபகரித்த சொத்துகளை மீட்டு அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ளதால் பிரதிநிதிகள் பதவி ஏற்றபிறகு அடுத்த வாரம் தான் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இருந்த போதும் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க திரண்டு வந்தனர்.