சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வுக்காக ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்ற போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வுக்காக ஆயத்த பணிகள் தீவிரம்

செய்துங்கநல்லூர் அருகே உள்ள சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வுக்காக ஆயத்த பணிகள் தீவரமாக நடந்து வருகிறது.

மாலை மலர்

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கடந்த 2 வருடங்காக தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தது. 

கடந்த வருடம் நடந்த அகழாய்வு பணியில் வட்டசில்கள், காதணிகள், சதுரங்க காய்கள், நூல்பிரிக்க பயன்படும் தக்களி, சுடுமண் முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண் சக்கரம், நுண்கற்கால கருவிகள், பட்டைதீட்டும் கற்கள், எலும்பால் ஆன கூர்முனை கருவிகள், அம்மி, குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசிமணிகள் உள்பட 700-க்கும் மேற்பட்ட தொல் பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்து 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் சிவகளையில் நடைபெறும் என்றும், இந்த அகழாய்வு பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்திருந்தது.

இந்த நிலையில் சிவகளை பரம்பு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணிக்காக முதல்கட்டமாக இடத்தினை சீர்செய்யும் பணிகளும், அளவீடு செய்யும் பணிகளும் தொடங்கி உள்ளது. 

இந்த அகழாய்வு பணியில் அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் அகழாய்வு இணை இயக்குநர் விக்டர் ஞானராஜ், சுதாகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இந்த அகழாய்வு பணியை பொறுத்தவரை சிவகளை பரம்பு, ஸ்ரீமூலக்கரை, பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் போட்டை திரடு, பேரூர் திரடு ஆகிய பகுதியில் பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.