திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ந் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திண்டுக்கல் மாந கராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பழனி நகராட்சி மற்றும் ஆயக்குடி, பாலசமுத்திரம், கீரனூர், நெய்க்காரப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பழனி பழனியாண்டவர் கலைக்கல்லூரியிலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஒட்டன்சத்திரம் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும்,
கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பிள்ளையார்நத்தம் அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அகரம், தாடிக்கொம்பு, வேடசந்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேடசந்தூர் & வடமதுரை சாலையில் உள்ள பி.வி.எம். மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.
இதே போல் பாளையம், எரியோடு பேரூராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை குஜிலியம்பாறை ஆலம்பாடி ராணி மெய்யம்மை உயர்நிலைப்பள்ளியிலும், வடமதுரை மற்றும் அய்யலூர் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குளத்தூர் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியிலும்,
நத்தம் பேரூராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நத்தம் துரைகமலம் மேல்நிலைப்பள்ளியிலும், நிலக்கோட்டை மற்றும் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும்,
அய்யம்பாளையம், வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கொடைக்கானல் நகராட்சி மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்திலும் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் முதலில் 14 வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அந்த 14 வார்டுகளுக்கு உரிய முகவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல கொடைக்கானல் நகராட்சியில் மொத்தமுள்ள 38 வாக்குச்சாவடிகளுக்கு 7 வாக்கு எண்ணும் பணி மேஜை வீதம் 6 சுற்றுகளாகவும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளுக்கு 4 வாக்கு எண்ணும் பணி மேஜை வீதம் 8 சுற்றுகளாகவும், பழனி நகராட்சியில் மொத்தமுள்ள 71 வாக்குச்சாவடிகளுக்கு 5 வாக்கு எண்ணும் மேஜை வீதம் 15 சுற்றுகளாகவும் நடைபெற்றது.
மேலும், மாவட்டத்தில் மொத்தம் உள்ள 23 பேரூராட் சிகளுக்கும் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 737 வாக்குச்சாவடிகளுக்கு 96 வாக்கு எண்ணும் மேஜைகளில் வாக்கு எண்ணும் பணியானது குறைந்தபட்சம் 4 சுற்றுகளாகவும், அதிக பட்சம் 15 சுற்றுகளாகவும் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்தவர்கள் உரிய ஆவணங்கள் வைத்துள்ளனரா என்று பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் வாக்கு எண் ணிக்கை மையம் அமைந்த பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டு வெளி நபர்கள் உள்ளே வராத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே போல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி மையம் முன்பும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.