திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் ஊராட்சி வடக்குவெளி கிராம நிர்வாக அதிகாரி நவநீதன் (வயது 34). இவரிடம் கடந்த நாட்களுக்கு முன்பு பெத்துபட்டி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (46) என்பவர் தனது விவசாய நிலத்துக்கான பட்டா எண்ணை மாற்ற நேரில் மனு கொடுத்தார்.
அவரின் பட்டா எண் திருத்தம் செய்ய கிராம நிர்வாக அதிகாரி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்த திருப்பது முன் தொகையாக ரூ.500 கொடுத்துவிட்டு மீதி தொகையை கொடுக்க விரும்பாமல் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகர் செய்தார்.
இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.1000&ஐ நேற்று திருப்பதி கிராம நிர்வாக அதிகாரி நவநீதனிடம் கொடுத்தபோது மறைந்து இருந்த லஞ்சஒழிப்பு அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் வென்று 6 ஆண்டுகளுக்கு வேலையில் சேர்ந்துள்ளார். முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
இவருக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தெரிவித்தார்.
லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தற்போது நன்கு படித்த இளைஞர்கள் பலரும் கிராம நிர்வாக அதிகாரிகளாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி வருகிறார்கள். புதிதாக வரும் அவர்களுக்கு உள் நடப்புகள் தெரிவதில்லை.
அங்கிருக்கும் உதவியாளர்கள், புரோக்கர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் பெயரில் அதிக தொகையை லஞ்சமாக வாங்கி கொண்டு சொற்ப தொகையை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் பழி முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகள் மீது விழுகிறது.
பிடிபட்ட நவநீதனும் கறாராக நடந்து கொள்வதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன என்றனர்.