திருச்சி:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது.
இன்று மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் களத்தில் நிற்க போகும் வேட்பாளர்கள் விபரம் கிடைத்துவிடும்.
இந்த தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல்களத்தில் நிற்கிறார்கள்.அ.தி.மு.க. வினரும் ஆளுங்கட்சிக்கு இந்த தேர்தல் மூலம் பாடம் புகட்டிவிடலாம் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் சூறாவளி பிரசாரத்தில் ஈடு பட்டுள்ளனர்.
திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றிவிடவேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது. அ.தி.மு.க.வினரும் தட்டிப்பறித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றுகிறார்கள்.
இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர் கனவில் தி.மு.க.-அ.தி.மு-.க.வை சேர்ந்த முன்னாள் துணை மேயர்கள், பல சீனியர் கவுன்சிலர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நீண்ட காலம் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்கள்வசம் இருந்தது.
தற் போது பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனால் மேயர் கனவில் ஆண்களே முந்தி நிற்கிறார்கள். பொது என் பதால் பெண்களும் நம் பிக்கை இழக்கவில்லை. ஒரு சில பெண் வேட்பாளர்களி டையேயும் மேயர் கனவு தொடர்கிறது.
தி.மு.க.வை பொறுத்த மட்டில் மேயர் வேட்பா ளர் யார்? என்பது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அரசியலில் நிலைப்பாடுகள் எப்போது வேண்டுமானாலும் மாறக் கூடும் என சிலருக்கு உள்ளூர ஆசை துளிர்விட்டு இருக்கிறது.
அ.தி.மு-.க.வில் 3 பேர் மேயர் கனவில் இருப்பதாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஆளுங்கட்சி தி.மு.க.வாக இருப்பதால் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அமைதி காக்கிறார்கள். ஆகவே திருச்சி மாநகராட்சி உள் ளாட்சி தேர்தல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.