வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மற்றும் இளம்பெண் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
வாலிபர் மற்றும் இளம்பெண் உடல்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
இளம்பெண் பச்சை நிற பேண்ட் ரோஸ் கலர் டாப் சுடிதார் அணிந்திருந்தார். வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
இரு உடல்களும் ரெயில் மோதி சிதறி கிடந்தது. உடல் பாகங்கள் முழுவதும் ரத்தமாக காட்சி அளித்தது.
அவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த பகுதியில் இளம்பெண், வாலிபர் யாராவது மாயமாகி உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்தார்களா? அல்லது அடித்து கொலை செய்து வீசப்பட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.