வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழுவில் மேகமலை அருவி அமைந்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் மேகமலை அருவிக்கு வர வனத்துறையினர் தடை விதித்தனர்.
மேலும் அருவி அருகே சோதனை சாவடியில் மேகமலை வனத்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வந்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மேகமலை அருவியில் மட்டும் 2 ஆண்டுகளாக தொடர்ந்து தடை நீடித்து வந்தது.
எனவே மேகமலை அருவியில் தடையை நீக்க மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மேகமலை வனச்சரகர் சதீஷ் கண்ணன் மற்றும் வனத்துறையினர் மேகமலை அருவியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை தீவிர தணிக்கை செய்து மதுபாட்டில் பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என வனத்துறை பணியாள ர்களுக்கு வனச்சரகர் உத்தரவிட்டார். 2 ஆண்டுகளுக்கு பின்பு தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.