ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள தக்காளி. 
உள்ளூர் செய்திகள்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை 1 கிலோ ரூ.10க்கும் கீழ் குறைந்துள்ளது.

மாலை மலர்

ஒட்டன்சத்திரம்:

தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான புதுசத்திரம், லக்கையன்கோட்டை, கள்ளி மந்தையம், அம்பிளிக்கை, கீரனூர், விருப்பாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு அதிக அளவில் தக்காளிகள் அனுப்பப்படுகின்றன. தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்ததால் கடந்த 2 மாதங்களாக விலை கடுமையாக உயர்ந்தது.

1 கிலோ ரூ.100க்கும் அதிகமாக சென்றதால்  பொதுமக்கள் சிரமமடைந்தனர். தற்போது மழை குறைந்ததால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. முகூர்த்த நாட்கள் உள்ளதால் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

விளைவிக்க செலவழித்த பணம் கூட கிடைக்காத விரக்தியில் பெரும்பாலானோர் செடியிலேயே தக்காளியை விட்டு விட்டனர். வரத்து  அதிகரிப்பின் காரணமாக கடந்த மாதம் ரூ.1200க்கு விற்பனையான 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி தற்போது ரூ.150க்கு மட்டுமே விலை கேட்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்தே காணப்பட்டது. 1 கிலோ புதிய சின்ன வெங்காயம் ரூ.70, பட்டறை வெங்காயம் ரூ.30, பல்லாரி ரூ.30, கத்தரிக்காய் .40, உருளைக்கிழங்கு ரூ.26, தேங்காய் ரூ.30, இஞ்சி ரூ.30 என்ற விலையில் விற்பனையானது.

பிப்ரவரி மாதத்தில் முகூர்த்த நாட்கள் உள்ளதால் காய்கறிகளின் தேவை அதிகரித்து விலை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.