குடிசை வீடுகள் தீப்பற்றி எரியும் காட்சி.  
உள்ளூர் செய்திகள்

அவிநாசி அருகே 2 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசம்

மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது.அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் சாலையில், தாமரைக் குளம் பகுதியில் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.இங்கு தர்மபுரி மாவட்டம் எம். பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி சிவகாமியுடனும், அதே பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் தனது மனைவி உமாவுடனும், தனித்தனியாக தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு குமாரின் மனைவி சிவகாமி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குடிசையில் தீ பற்றியது. இதில் மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது. சிறிது நேரத்திலேயே இரு குடிசைகளும் முற்றிலும் தீயில் எரிந்ததால் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது.

தகவல் அறிந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர். அவிநாசி வட்டாட்சியர் மோகன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், தீ விபத்து பகுதியில் ஆய்வு செய்து இரு குடும்பத்தினரும் மாற்றிடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

SCROLL FOR NEXT