கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் சிறுவர்கள் - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பெரியவர்கள் அனுமதிப்பதாலும் அவர்கள் அசட்டையாக இருப்பதாலும்தான் சிறுவர்கள் காரை எடுத்து ஓட்டுகின்றனர்.

மாலை மலர்

திருப்பூர்:

சமீபத்தில் பல்லடம் அருகே நடந்த கார் விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். காரை ஓட்டியது சிறுவன் என்ற உண்மையை அறிந்ததும் போலீசார் திகைத்தனர். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆனால் அதை மீறி சிறுவன் ஆர்வத்தில் காரை இயக்கியிருக்கிறார். அவருடன் அவரது நண்பர்கள் பயணித்திருக்கின்றனர்.

பெரியவர்கள் அனுமதிப்பதாலும் அவர்கள் அசட்டையாக இருப்பதாலும்தான் சிறுவர்கள் காரை எடுத்து ஓட்டுகின்றனர். திருப்பூரில் இருசக்கர வாகனங்களை போன்றே கார் உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடும் அதிகம். திருப்பூரில் உள்ள சாலைகளில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் இயக்குவதை இயல்பாக காண முடிகிறது.

கல்வி நிலையங்களுக்கு கூட பிளஸ் 2 மற்றும் அதற்கு கீழ் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் வருகின்றனர். சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த 2019-ல் சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு கை, கால், வாய் என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறுவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

டீன் ஏஜ் பருவத்தினர் மற்ற சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் பைக் பந்தயத்தில் ஈடுபடும் சம்பவங்கள் ஏராளமாக நடக்கின்றன. எனவே மோட்டார் வாகனச்சட்டத்தை திறம்பட அமல்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும்.

இளம் பருவத்தினர் வாகன விபத்துகளில் சிக்கி அவதிப்படுவது மீண்டும் நிகழாமல் இருக்க சட்டத்தை அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாக இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால், சிறுவர்கள் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகளில் இழப்பீடு தொடர்பான வழக்குகள் குவிந்து விடும் என்றும் நீதிமன்றம் அச்சம் தெரிவித்தது. திருப்பூர் மாநகரை பொறுத்தவரை போக்குவரத்து நிறைந்த இடம் . 

நெருக்கடியான சாலைகளில் சிறுவர்களை வாகனங்கள் இயக்க அனுமதிக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பெற்றோருக்கும், காப்பாளருக்கும் உண்டு. எனவே உரிய வயது வந்த பின்னர் சிறுவர்கள் வாகனங்களை இயக்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.