வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியையொட்டி தேர் திருவிழா நடைபெறும். இந்த தேர் திருவிழா 3 நாட்கள் நடைபெறும். விழாவில் இந்த கோவிலை சேர்ந்த 11 குலத்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு 139-வது மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் பிப்ரவரி 14-ந்தேதி காலை 9 மணிக்கு தேர் முகூர்த்தகால் நிகழ்ச்சியும், 23-ந்தேதி காலை 9 மணிக்கு தேரில் கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று 1-ந்தேதி காலை 10.30 மணி அளவில் சுவாமி ரதத்திற்கு எழுந்தருள செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு செல்லாண்டி அம்மனுக்கு பள்ளய பூஜையும், அதன் பிறகு வீரகுமாரசாமி கோவிலில் உள்ள பள்ளய கருப்பண்ணசாமிக்கு பள்ளய பூஜையும் நடைபெற்றது.
அதன் பின்னர் சோழீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று முதன்மைதாரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
இன்று 2-ந்தேதி புதன்கிழமை மாலை 5மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. நாளை 3-ந் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தேரோட்டம், திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பிறகு சுவாமி தேர்பவனி, தேவஸ்தான மண்டப கட்டளையும் அதைத்தொடர்ந்து 4-ந் தேதி உள்ளூர் ஆந்தை குலத்தவர்கள், 5-ந் தேதி தனஞ்செய குலத்தவர்கள், 6-ந் தேதி மாட குலத்தவர்கள், 7-ந் தேதி தென்முக ஆந்தை குலத்தவர்கள், 8-ந் தேதி வடமுகத்தை குலத்தவர்கள், 9-ந் தேதி ஓதாள குலத்தவர்கள், 10-ந் தேதி இலுப்பை கிணறு தனஞ்செய குலத்தவர்கள், 11-ந் தேதி கல்லி குலத்தவர்கள், 12-ந்தேதி வண்ணக்கன் குலத்தவர்கள், 13-ந் தேதி நரிப்பழனி கவுண்டர் வகையறா ஆந்தை குலத்தவர்கள், 14-ந்தேதி ஆதி கருப்பன் வலசு நஞ்சப்ப கவுண்டர் வகையறா தனஞ்செய குலத்தவர்கள், 15-ந்தேதி பலிஜவார் குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெற உள்ளது.
இந்த கோவில் தேர் திருவிழா ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்களும், முதன்மைதாரர் நற்பணி மன்றத்தினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும் செய்துள்ளனர். திருவிழா நாட்களில் இரவு 10 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும்.
தேர் திருவிழாவையொட்டி வெள்ளகோவில் காவல் நிலையத்தின் சார்பில் கோவில் வளாகத்தில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைத்து 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெரிய தேரில் வீர குமாரசாமி, வீரபாகு சுவாமியை வைத்திருந்தனர்.
சின்ன தேரில் செல்லாண்டியம்மனை வைத்திருந்தனர். பக்தர்கள் வீரக்குமரனுக்கு அரோகரா கோஷத்துடன் தேர் வடத்தை பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர்கள் எஸ்.என்.முத்துக்குமார், பிரியா ராமசாமி, சுந்தரவடிவேல், எஸ். கே. குணசேகர், முதன்மை நற்பணி மன்ற தலைவர் என். டி.பாலசுப்பிரமணி. பி.குமாரசாமி, முன்னாள் தக்கார் கே.கேபழனிசாமி, மற்றும் கோவில் செயல் அலுவலர் ராமநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கோவில் குலத்தவர்கள், முதன்மைதாரர்கள், நற்பணி மன்றத்தினர், அறங்காவலர் குழுவினர் அறநிலையத்துறையினர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.