கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

உடுமலை பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் திருட்டு - பொதுமக்கள் புகார்

4 திட்டங்களில் இருந்து நாளொன்றுக்கு 31.29 எம்.எல்.டி., குடிநீர் எடுக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

உடுமலை:

உடுமலை அருகே திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு நகராட்சி, கணக்கம்பாளையம், பூலாங்கிணறு, குடிமங்கலம், மடத்துக்குளம் உட்பட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்கள் வாயிலாக 409 ஊரக குடியிருப்புகளிலுள்ள 2.50 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

4  திட்டங்களில் இருந்து நாளொன்றுக்கு 31.29 எம்.எல்.டி., குடிநீர் எடுக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. அணை அருகிலுள்ள நீரேற்று நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தளி ரோட்டோரத்தில் குடிநீர் திட்டங்களுக்கான பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் பிரதான குழாய் உடையும் போது குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக சீரமைப்பதில்லை. 

இதனால் நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. குறிப்பாக நீரேற்று நிலையத்தில் இருந்து போடிபட்டி வரை சில இடங்களில் உடைப்பு தொடர் கதையாக உள்ளது. இவ்வாறு உடைப்பு ஏற்படும் பகுதிகளில் மெகா குழி ஏற்பட்டு தண்ணீர் தேங்குகிறது.

வீணாகும் தண்ணீரை பயன்படுத்தி ஒரு கிராமம் முழுவதும் முழுமையாக குடிநீர் வினியோகிக்க முடியும். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் வினியோகத்தில் கவனம் செலுத்த வேண்டிய துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கூட்டுக்குடிநீர் திட்டங்களின் பிரதான குழாய்கள் சில இடங்களில் தண்ணீர் திருட்டுக்காக உடைக்கப்படுவதாகவும், நீண்ட காலமாக புகார் உள்ளது. உடைப்பிலிருந்து வெளியேறி தடுப்பணை போல தேங்கும்போது இரவு நேரங்களில் தண்ணீரை திருடுகின்றனர்.

இதுகுறித்து கண்காணிப்பு இல்லாத நிலையில் இந்த அவலம் தொடர்கதையாக மாறியுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க சிறப்பு பணியாளர்கள் குழு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் இரவு நேரங்களில் உள்ளாட்சி அமைப்பினர் ஒத்துழைப்போடு, ரோந்து சென்றால் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும். இத்தகைய பணிகளை உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே கோடையிலும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.