கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் பங்களிப்பு தொகை குறைப்பு

திட்ட மதிப்பீட்டு தொகையில் குடியிருப்பு மக்கள் பங்களிப்பாக ஐந்தில் ஒரு பங்கு தொகை செலுத்த வேண்டும்.

மாலை மலர்

உடுமலை:

மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழகத்தில், ‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி  ஒரு திட்டத்தை செயல்படுத்த ஆகும் செலவில் ஒரு பங்கு தொகையை மக்கள் பங்களிப்பாக அளித்தால் மீதமுள்ள இரண்டு பங்கு தொகையை  அரசே வழங்கும்.

அவ்வகையில் உள்ளாட்சி அமைப்புகளில்  பொதுமக்கள் பங்களிப்புடன் பூங்கா உருவாக்கம், விளையாட்டுத்திடல் அமைப்பு, தெருவிளக்கு அமைத்தல், அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டடம் கட்டுதல், மேம்படுத்தப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைத்தல் என  பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில்  இத்திட்டத்தின் கீழ் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., குடியிருப்புகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் திட்ட மதிப்பீட்டு தொகையில் இக்குடியிருப்பு மக்கள் பங்களிப்பாக ஐந்தில் ஒரு பங்கு தொகை செலுத்த வேண்டும்.

மீதமுள்ள தொகையை அரசு வழங்கும். இதுகுறித்து உடுமலை பி.டி.ஓ., மணிகண்டன் கூறுகையில், நமக்கு நாமே திட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி., குடியிருப்பு பகுதிகளுக்கான திட்டங்களுக்கு மக்கள் பங்களிப்பு தொகையை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  5-ல் ஒரு பங்குக்கான தொகையை மட்டும் அப்பகுதி மக்கள் அளித்தால் போதுமானது  என்றார்.